சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்.5) தொடங்கியது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 9.53 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 22.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கிராமப்புற பகுதிகளில் 13 ஆயிரத்து 500, நகர்ப் பகுதிகளில் 7 ஆயிரத்து 132, 114 இளைஞர்கள் வாக்குச்சாவடிகள், பெண்களால் நிர்வகிக்கப்படும் 115 வாக்குச்சாவடிகள், 87 மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடிகள் என அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 957 ஆண் வாக்காளர்கள், 95 லட்சத்து 77 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள் மற்றும் 467 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 650 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5.24 லட்சம் முதல்முறை வாக்காளர்கள், 2.31 லட்சம் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 8 ஆயிரத்து 821 100 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.