புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
பாஜகவின் இரண்டாவது கட்டத்தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், "அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை, எளிய மாணவர்களுக்கு எல்கேஜி முதல் பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டித்தேர்வர்கள், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இரண்டு முறை தேர்வு எழுதுவதற்கு ரூ.15,000 உதவி தொகை வழங்கப்படும்.
பீமராவ் அம்பேத்கர் நிதி உதவி திட்டத்தின் கீழ் பட்டியலினததை சேர்ந்த மாணவர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக்குகளில் படிப்பதற்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். ஆட்டோ-டாக்சி ஓட்டுநர் நல வாரியம் அமைக்கப்படும். ஓட்டுநர்களுக்கு ரூ10 லட்சம் மதிப்புள்ள லைஃப் இன்ஷூரன்ஸ், ரூ.5 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு ஆகியவை வழங்கப்படும். அதே போல வீட்டு வேலை பணி புரிவர்களுக்கான நல வாரியம் அமக்கப்படும். ஓட்டுநர்களைப் போலவே இவர்களுக்கும் காப்பீடு வழங்கப்படும்.
இதையும் படிங்க:"தொடர்ச்சியாக பொய் பேசி சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது"-திருமுருகன் காந்தி விளாசல்
டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்ததும், ஆம் ஆத்மி கட்சியின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும். டெல்லியில் ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்டங்களை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்,"என்று கூறினார்.
டெல்லி தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் அறிக்கையை கடந்த 17ஆம் தேதி மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார். அந்த அறிக்கையில், ஆம் ஆத்மி செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், 60 முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.2500 பென்ஷன் வழங்கப்படும்.. அதே நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஊட்டசத்து பெட்டகங்கள், ரூ.21,000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சி புரிந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு மூன்று தொகுதிகளையும், 2020ஆம் ஆண்டு 8 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில் வரும் பிப்வரி 5ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும்.