தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் நியமனம்...காங்கிரஸ் கடும் அதிருப்தி! - NHRC CHAIRMAN

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன்
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் (Image credits-IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2024, 1:56 PM IST

புதுடெல்லி:தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவி காலம் கடந்த ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்து விட்டது. இதையடுத்து அது முதல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் புதிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரை நியமிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை தலைவராகக் கொண்ட உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் துணை சபாநாயகர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து உயர்மட்டக்குழுவின் பரிந்துரைப்படி தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ராமசுப்ரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி ஒருவர், "ஆணையத்தின் தலைவர் நியமனம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு கிடைக்கப்பெற்றது,"என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற உயர்மட்டக்குழுவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே இருவரும் முறையே நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், நீதிபதி குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகியோரில் ஒருவரை தேசிய தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். எனினும் அவர்களது பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து தமது எதிர்ப்பை பதிவு செய்த இருவரும், "தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம் என்பது அடிப்படையில் குறைபாடுகள் கொண்டதாக உள்ளது. மேலும் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒருவர் நியமிக்கப்பட்டதன் மூலம் பரஸ்பரம் கருத்தொற்றுமை குறித்த ஆலோசனை என்பது புறக்கணிக்கப்பட்டுள்ளது

இந்த நியமனமானது உயர்மட்டக்குழுவின் தேர்வுக்கு நம்பிக்கை தன்மையை அளிக்கும் பாகுபாடு இன்மை, நேர்மை ஆகிய கொள்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. விவாதத்தை ஊக்குவிப்பதற்கும், ஒரு கூட்டு முடிவை உறுதி செய்வதற்கும் பதிலாக, குழுவானது கூட்டத்தின் போது எழுப்பப்பட்ட நியாயமான கவலைகள் மற்றும் முன்னோக்குகளைப் புறக்கணித்து, பெரும்பான்மையானோரின் எண்ணிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து மககளின் அடிப்படை மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில், தேசிய மனித உரிமை ஆணையம் என்ற முக்கியமான தன்னிச்சையான அமைப்பாகும்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Image credits-ANI)

பன்முக தன்மை அவசியம்:குறிப்பிடத்தக்க வகையில் பிரதிநிதித்துவம், அனைவரையும் உள்ளடக்கியதை சார்ந்து கட்டாயம் நிறைவேற்றப்படும் திறமையை கொண்டிருக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் பல்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் தனித்தன்மை வாய்ந்த சவால்களை உணர்வுப்பூர்வமாக அணுகுவதை உறுதி செய்வதாக தேசிய மனித உரிமை ஆணையம் பன்முக தன்மை கொண்ட தலைமையாக திகழ வேண்டும்

நாங்கள் பரிந்துரைத்த நீதிபதி ஃபாலி நாரிமன், பார்சி சமூகத்தை சேர்ந்தவர், அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளில் ஆழ்ந்த‍ அறிவும், உறுதியான பொறுப்புடமையும் கொண்டவர். அவர் நியமிக்கப்பட்டிருந்தால், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தின் பிரதிதித்துவத்துக்கு அர்பணிப்பாக இருந்திருக்கும், அதே போல உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப், கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர். தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்தும் பல தீர்ப்புகளை வழங்கி உள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.

மேலும், மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக நீதிபதி முரளிதர், நீதிபதி அகில் அப்துல் ஹமீது குரேசி ஆகியோரை பரிந்துரை செய்தோம். எனினும் அவர்களும் தேர்வு செய்யப்படவில்லை. கடைசியாக, தேர்வுக் குழுவின் பெரும்பான்மையினரால் நிராகரிப்பு அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது,"என்று கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details