டெல்லி: தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் இளங்கலை மற்றும் முதுகலை, தேசிய பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் நெட் தேர்வுகளில் வினாத் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் தலைமையிலான 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜேஇஇ (மெயின்), நீட் (இளங்கலை மருத்துவ படிப்பு), சிமேட், ஜிபாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நீட் (இளங்கலை மருத்துவ படிப்பு) நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் 7 பேர் கொண்ட உயர் மட்ட நிபுணர் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேர்வுகளை வெளிப்படையாகவும், சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர். கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர் மட்ட நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.
தேர்வு நடைமுறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என்றும் 2 மாதங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பிஜே ராவ், டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரந்தீப் குலேரியா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கே. ராமமூர்த்தி, பங்கஜ் பன்சால், ஐஐடி டெல்லியின் பேராசிரியர் ஆதித்யா மிட்டல், மத்திய கல்வி அமைச்சகம் இணைச் செய்லாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதனிடையே தேசிய தேர்வு முகமை தலைவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நீட் முறைகேடு புகார்கள் எதிரொலியாக தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத்குமார் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த பிரதீப் சிங் கரோலா, தேசிய தேர்வு முகமையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்! - NEET PG Exam postponed