புதுவையில் சுற்றுலாப் படகுகளை இயக்க மீன்வர்கள் எதிர்ப்பு புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப் பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், திடீரென புற்றீசலைப் போல நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் படகுகள் இயக்கப்பட்டன. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி அனைத்தையும் புதுச்சேரி அரசு தடை செய்தது.
பின்னர் முறையாக அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் படகுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில், 300க்கும் மேற்பட்டோர் சுற்றுலாப் படகுகளை இயக்க அரசின் அனுமதியைக் கேட்டுள்ளனர். மீண்டும் சுற்றுலாப் படகுகள் இயக்கத்திற்கு அரசு பரீசிலனை செய்து வருகிறது.
இதனை எதிர்த்து, ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் சுதேசி மில் அருகே இன்று (பிப்.3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலாப் படகுகளை இயக்குவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும், இறால் முட்டைகள் முதல் குஞ்சுகள் வரை அழிந்து வருவதாகவும், கடல் வளமும், ஆற்று வளமும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற திமுக அமைப்பாளர் சிவா, "சுற்றுலா என்ற பெயரில், ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு வெளிமாநிலத்தவரைக் கொண்டு படகுகளை இயக்குவது கண்டிக்கத்தக்கது. இதனை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் போராட்டம் தொடரும். புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்கு அறிவித்த எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கலாச்சாரத்தை சீரழிக்கும் புதிய கலாச்சாரத்தை விரும்பவில்லை" என திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.
இதையும் படிங்க:நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு!