டெல்லி:நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை.22) கூடியது. மக்களவையில் 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் 2023-24 நிதி ஆண்டில் உலகளாவிய மற்றும் வெளிப்புற சவால்கள் இருந்த போதிலும் கட்டமைக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் முன்னோக்கி கொண்டு சென்றது என்றார். மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் கவனம் செலுத்தியதால், இந்த சவால்கள் இந்தியாவின் பொருளாதாரத்தில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.
இதன் காரணமாக, 2024 ஆண்டில் இந்தியாவின் நிகர் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததாகவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 7 சதவிகிதத்திற்கும் மேலாக வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் நிர்மலா சிதாராமன் குறிப்பிட்டார். நிலையான நுகர்வு தேவை மற்றும் சீராக மேம்படுத்தப்பட்ட முதலீட்டு தேவை ஆகியவற்றால் இந்த இலக்கை அடைந்ததாக கூறினார்.
அதேபோல் 2011-12 நிதி ஆண்டில் மொத்த மதிப்பு கூட்டல் துறையை காட்டிலும் 2024 ஆண்டில் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2011-12 நிதி ஆண்டில் நிலையான வருவாயில் உள்ள நிகர வரிகள் 2024 நிதி ஆண்டில் 19.1 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டில் வேலையின்மை விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாகவும், கரோனா காலக்கட்டத்தை காட்டிலும் அதற்கு பிந்தைய காலக்கட்டத்தில் வேலையின்மை விகிதம் என்பது பெரிய அளவில் குறைந்து இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை விகிதம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் கரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
பாலினக் விகிதாச்சாரத்தில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளாக உயர்ந்து வருவதாகவும், கடந்த 2017-18 நிதி ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் விகிதம் 2022-23 நிதி ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்து உள்ளதாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புற பெண்களின் பங்களிப்பு அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2025 நிதி ஆண்டில் நிகழ் நேர ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும் சந்தை நிலவரங்களை பொறுத்து அது மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.