குல்காம்: ஜம்மு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து காஷ்மீர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இன்று நடந்த என்கவுண்டரில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் தளத்தில், "குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர்'' என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:நான்கு மாற்றுத்திறனாளி மகள்களுடன் பீகார் நபர் தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
இந்த என்கவுண்டர் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “அதிகாம் தேவ்சார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. பாதுகாப்புப் படையும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் கூட்டுக் குழுவாக இணைந்து அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. பொதுமக்கள் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மறைந்திருந்த தீவிரவாதிகளை கவனமாக அணுகியபோது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் மூன்று ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், மறைந்திருக்கும் தீவிரவாதிகள் தப்பிச் செல்ல முடியாதபடி அனைத்து வழிகளையும் பாதுகாப்புப் படையினர் அடைத்துள்ளனர் என்றும், காயமடைந்த பாதுகாப்பு வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்