தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் தேர்தல் மோதல்களால் பதற்றம்: தலைமை செயலர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன்! - Lok sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கலவரம் குறித்து விளக்கம் அளிக்க மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 4:33 PM IST

டெல்லி:ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த மே 13ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து 175 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே பல்வேறு இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

திருப்பதி, சந்திரகிரி, தாடிபத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலுக்குப் பிறகும் மோதலில் ஈடுபட்டனர். கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி இரு தரப்பினரையும் கலைத்தனர்.

இதே போல் தாடிபத்திரி தொகுதியில் இரு கட்சியினர் இடையே கடுமையான மோதல் வெடித்தது. அடுத்தடுத்து மோதல் காரணமாக ஆந்திர பிரதேச மாநிலமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கலவர சம்பவங்கள் குறித்து மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு இந்திய தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

மாநிலத்தில் இரு கட்சியினரிடையே நிலவும் கலவரம் சம்பவங்கள் குறித்தும் கலவரத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தனிப்பட்ட முறையில் விளக்கமளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மேலும், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதாகவும், இது போன்ற கலவர சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு உறுதி செய்யுமாறும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது முதலே ஜனநாயகத்தில் வன்முறைக்கான இடத்தை துளியும் அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருவதாகவும், வன்முறையில்லா தேர்தல் உறுதி செய்யும் பொருட்டு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 4 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது. மக்களவை தேர்தலுடன் ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி... விரைவில் மீட்கப்படும்" - மத்திய அமைச்சர் அமித் ஷா! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details