டெல்லி : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இன்று (மார்ச்.20) வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், எந்தெந்த மாநிலங்களில் என்றைக்கும் வேட்புமனு தாக்கலுக்கான நிறைவு நாள் உள்ளிட்ட அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
வரும் மார்ச் 28ஆம் தேதி பீகாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதேபோல், மார்ச் 27ஆம் தேதி அருணாசல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தர காண்ட், மேற்கு வங்கம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
பீகாரில் வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 30ஆம் தேதியும், மற்ற மாநிலங்களில் மார்ச் 28ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீகாரில் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 2ஆம் தேதியும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.