டெல்லி:டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபானக் கொள்கை தனியாருக்கு லாபம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஐந்து முறை சம்மன் அளித்தும் அவர் ஆஜராகாத நிலையில், 6வது முறை சம்மன் அளித்த அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் நடவடிக்கைகளை காரணம் காட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் ரமேஷ் குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று (பிப்.17) அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரன்சில் ஆஜரானார். இந்நிலையில், வழக்கை மார்ச் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்த டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, அன்று அரவிந்த் கெர்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
முன்னதாக, அமலாக்கத்துறை தரப்பில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் நொண்டி சாக்குகளை கூறுவதாகவும், உயர் பொறுப்பில் உள்ள அவரது நடவடிக்கை சாதாரண மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமையும் எனத் தெரிவித்திருந்தது.
மேலும், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாகவும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும், சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தையும் அவர் நிறைவேற்றியிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று மாலை விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள்!