புதுதில்லி:நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு, இன்று பூஜ்ய நேரத்தில், வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக பேசினார். அப்போது அவர், "வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்த துல்லியமான அறிவிப்புகளை வெளியிடுவது இந்திய வானிலை மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பொறுப்பாகும். கணிக்க முடியாத கனமழை மற்றும் மிகவும் கடுமையான வானிலை நிலவும் நிலையில், வானிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது அவசியமாகிறது.
இந்த இலக்கை அடைவதற்கு, வானிலை ஆய்வு மையத்துக்கு பல கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது. இதற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய (Public Private Partnership) திட்டம் இந்தியாவுக்கு ஏதுவாக இருக்கும் " என்று திமுக எம்.பி. பேசினார்.
மேலும், "செயற்கை நுண்ணறிவு, தரவுகள் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நவீன கட்டமைப்புகளை கொண்ட ஏராளாமான தனியார் நிறுவனங்கள் இன்று உள்ளன. வானிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பதற்கும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கும் இந்நவீன தொழிற்நுட்ப வசதிகளை கொண்ட நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.
இதனை கருத்தில் கொண்டு, இதில் அரசு -தனியார் பங்களிப்பு திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு மாநிலங்களவையில் பேசினார்.