டெல்லி:டெல்லியில் இரண்டாயிரம் ரூபாய் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 3 பேர் கொண்ட போதைப்பொருள் கும்பலிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக்கிற்கும் தொடர்பு இருப்பது மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் ஜாஃபர் சாதிக்குடன் இணைந்து இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜாஃபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்கும் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனில் இவ்வழக்கு விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.