மகாராஷ்டிரா:18வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஜூன்.4) நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் இந்தியா கூட்டணி கடுமையாக முயற்சித்து வருகிறது. பாஜகவுக்கு ஆட்சியைக் கைப்பற்ற போதிய ஆதரவு இருக்கும் போதும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் அக்கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால் கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 240 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு கணிசமான தொகுதிகள் கையை விட்டு போனதே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019ஆம் அண்டு மக்களவை தேர்தலின் போது 41 இடங்களை வென்ற பாஜக கூட்டணி, தற்போதை தேர்தலில் வெறும் 17 இடங்களில் மட்டுமே வென்றி கண்டுள்ளது. இதில் பாஜக தனித்து 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 24 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.