டெல்லி:நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாத பிற்பகுதியில் இருந்தே தொடங்கிவிட்டது. அதிலும், ஏப்ரல் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக, வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகியது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. இதனிடையே, ரீமால் புயல் உருவாகி மழை பெய்தது.
இருப்பினும், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பம் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று அதிகபட்சமாக டெல்லியின் முங்கேஷ்பூர் பகுதியில் 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவே, நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு ஆகும். முன்னதாக, நேற்றைய தினம் வடகிழக்கு டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்டவா கூறுகையில், “டெல்லியின் சில பகுதிகளில் இன்று காலை முதலே வெப்ப காற்று வீசி வருகிறது. அதிலும், ஏற்கனவே மோசமான வானிலை நிலவுகிறது. குறிப்பாக, டெல்லியின் முங்கேஷ்பூர், நரேலா மற்றும் நஜாஃகர் ஆகிய இடங்கள் அதிக அளவிலான வெப்ப காற்று வீசும் இடங்களாக உள்ளன” என்றார்.