டெல்லி:புதிய மதுபான கொள்கை சட்டம் தொடர்பான பண மோசடி வழக்கில் 6வது முறையாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் இன்று (பிப்.16) டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சட்ட விரோத பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கைது செய்யப்பட்டார். அதன் பின் புதிய முதலமைச்சராகச் சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டார். ஆனால், ஜார்க்கண்ட மாநில ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 5 முறை விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி 6வது முறையாகச் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.