டெல்லி :விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் 46 வேட்பாளர் பெயர்கள் அடங்கிய 4வது கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. அசாம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜெய் ராய்க்கு மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக அஜெய் ராய் போட்டியிட உள்ளார். அதேபோல் முன்னாள் எம்எல்ஏ இம்ரான் மசூத் ஷஹரான்பூர் தொகுதியிலும், விரேந்தர் ராவத், ஹரித்வார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அண்மையில் பகுஜான் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த டேனீஷ் அலி, அம்ரோஹா தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ராஜ்கர்க் மக்களவையில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னாள் மத்திய அமைச்சர ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையிலும், பி.மாணிக்கம் தாகூர் விருதுநகர் தொகுதியிலும், ஜோதிமணி கரூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக வேட்பாளர் அறிவிப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் விகாஷ் தாக்ரே நாக்பூர் தொகுதியிலும், உத்தர பிரதேசம், ஜான்சியில் பிரதீப் ஜெயின் ஆதித்யா மற்றும் தியோரியாவில் அகிலேஷ் பிரதாப் சிங் ஆகியோரும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அசாம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடும் 49 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சிக்கிம் சட்டப் பேரவை தேர்தலுக்கான 18 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 1ஆம் தேதி 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிங்க :பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்! இமாச்சலத்தில் காங்கிரசுக்கு பின்னடைவா? - HP Congress Rebel MLAs Join BJP