டெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் (Ajay Maken) தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜய் மக்கன், “இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் பிரதான கட்சிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கட்சி வழங்கிய காசோலைகள் மதிப்பிழந்ததாக வியாழக்கிழமை அன்று வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டதாகவும்” மக்கன் தெரிவித்தார்.
மேலும், “எங்களிடம் மின்சாரக் கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் பணம் இல்லை. நீதி யாத்திரை மட்டுமின்றி, எல்லாம் பாதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் நன்கொடையைக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இப்போது பணம் வரமால் எப்படி செலவுகளை மேற்கொள்வது?” எனத் தெரிவித்துள்ளார்.
2018 - 2019ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்ய 45 நாட்களுக்கு மேல் தாமதிக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அஜய் மக்கன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்சி வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தை (ITAT) தொடர்பு கொண்டிருப்பதாகவும், அங்கு மேல்முறையீட்டு விசாரணை நடந்து வருவதாகவும், நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கன் தெரிவித்துள்ளார்.