அகமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் குறித்து குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல் படையினர் அரேபிக் கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த படகு ஒன்றை வழிமறித்து பிடித்தனர்.
பாகிஸ்தான் படகில் இருந்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான 86 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஏறத்தாழ 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் படகில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எந்த வகையிலானது என்பது குறித்து கடலோர காவல் படையினர் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.