தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

61 வயதை தொட்ட சிபிஐ.. வரலாறு, அதிகாரம், செயல்பாடு என்ன? - CBI Turns 61

CBI Turns 61: மத்திய அரசின் முதன்மை விசாரணை அமைப்பாக உள்ள சிபிஐ, ஊழலைத் தடுப்பதற்கும், நேர்மைத் தன்மையை நிலைநாட்டுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிபிஐ நிறுவப்பட்டு இன்றுடன் 61 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் வரலாறு, அதிகாரம், செயல்பாடு குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 12:30 PM IST

Central Bureau Of Investigation
மத்திய புலனாய்வு அமைப்பு

ஹைதராபாத்:மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (Central Bureau of Investigation - CBI), பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் குறைதீர்ப்பு நடுவண் அமைச்சகத்தின், பணியாளர் துறையின் கீழ் இயங்கும் முதன்மைக் காவல் நிறுவனமாகும். 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த அமைப்பு (சிபிஐ), ஆரம்பகாலத்தில் ஊழல் சார்ந்த விவகாரங்களை மட்டுமே விசாரிக்கும் அமைப்பாக செயல்பட்டு வந்தது.

ஆனால் பின்னாளில், பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதாரக் குற்றங்கள், முறைகேடுகள், மிக முக்கிய ஊழல், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை விசாரிக்கும், நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பாக (சிபிஐ) மாறி, தற்போது சர்வதேச காவல் துறையின் உறுப்பு நாடுகளுக்கான விசாரணைகளை நிர்வகிக்கும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ காவல் நிறுவனமாக உள்ளது, சிபிஐ.

வரலாறு:இரண்டாம் உலகப்போரின் போது, அந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி, லஞ்சம் மற்றும் இதர ஊழல்கள் சார்ந்த முறைகேடுகள் அதிகரித்தன. இந்த முறைகேடுகளில் அரசு ஊழியர்களும் ஈடுபட்டதால், அவர்களை விசாரிக்க காவல்துறையும், பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் இல்லை. ஆகவே, அரசு ஊழியர்களை விசாரிக்கும் தனி அமைப்பாக 'சிறப்பு காவல் நிர்வாகம்' (Special Police Establishment -SPE) கடந்த 1941ல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பே, 1963ல் உள்துறை அமைச்சகத் தீர்மானத்தின் மூலம், பணியாளர் துறையின் கீழ் சிபிஐ ஆக மாற்றப்பட்டது.

சிபிஐயின் முதல் இயக்குனர்:சிபிஐயின் முதல் இயக்குநர், டி.பி.கோஹ்லி. இவர் ஏப்ரல் 1, 1963 முதல் மே 31, 1968 வரை மத்திய காவல் கல்லூரியின் (சிபிசி) டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றியவர். மேலும், இவர் கடந்த 1955 முதல் 1963 வரை, சிறப்பு காவல் நிர்வாகத்தில் (SPE), சிறப்புக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.

இவர் எஸ்பிஇ-ல் சேருவதற்கு முன்பு, மத்திய அமைச்சகத்தின் காவல்துறைத் தலைவராகவும் இருந்துள்ளார். அதோடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் காவல் படைகளில், பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் வகித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 1967ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய இயக்குநர்:மாநில காவல்துறை தலைவர் பதவியிலுள்ள (டிஜிபி) அல்லது இருந்த அதிகாரி, சிபிஐ அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள் ஆகும். அந்த வகையில், கர்நாடக மாநில காவல்துறையின் முன்னாள் டிஜிபி (DGP) மற்றும் ஐஜிபியாக (IGP) இருந்த பிரவீன் சூத், தற்போதைய சிபிஐ இயக்குநராக உள்ளார்.

சிபிஐயின் சட்ட அதிகாரங்கள்:ஆரம்பத்தில் ஊழல் தொடர்பான வழக்குகளை மட்டுமே விசாரித்து வந்தசிபிஐக்கு, 1946ல் நிறைவேற்றப்பட்ட டெல்லி சிறப்புக் காவல் அமைப்பு (டிஎஸ்பிஇ) சட்டம், குற்றவியல் விசாரணை நடத்தும் அதிகாரத்தை வழங்கியது. அதன்படி, 1965 முதல் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் கொலைகள், கடத்தல்கள், பயங்கரவாதச் செயல்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க குற்றங்களைத் தேர்ந்தெடுத்து விசாரிக்கும் அதிகாரம் சிபிஐ வசம் வந்தது.

சிபிஐயின் செயல்பாடுகள்:

  • குற்றங்கள் மற்றும் வழக்குகளை ஆராய்தல்
  • பொருளாதார குற்றங்கள், மோசடிகள், ஊழல்கள், சிக்கலான வழக்குகள், பெரிய அளவிலான குற்றங்கள் உள்ளிட்டவற்றை விசாரிப்பது
  • வெளிநாடுகளில் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய குற்றங்களை விசாரித்தல்
  • விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளிகள் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை உறுதி செய்வது
  • பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தொழிநுட்ப ஆதரவு மற்றும் பயிற்சி வழங்கி, குற்ற செயல்களை குறைப்பதற்கு பங்களிப்பது போன்ற செயல்பாடுகள் ஆகும்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details