டெல்லி:தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையம் டெல்லியிலும் கிளை ஒன்றுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் அண்மையில் யுபிஎஸ்சி மாணவர் சேர்க்கைக்கான விளம்பரம் செய்திருந்தது. அதில், 2022 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 933 பேரில் 336 பேர் இந்த அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும், யுபிஎஸ்சி-யில் தேர்வானவர்களில் முதல் 100 பேரில் 40 பேர் தங்களது பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்றும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 40 பேரில் 37 பேர் இங்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் அந்த விளம்பரத்தில் கூறியிருந்தது. இந்த விளம்பரம் யுபிஎஸ்சி-க்கு தயாராகி வருபவர்களிடையே கவனம் பெற்றதோடு கல்வியாளர்கள் மத்தியில் பேசுபொருளானது.
இந்த விளம்பரம் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை நடத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் செப்டம்பர் 2ம் தேதி தனது தீர்ப்பை வழங்கியது. இந்த விசாரணை முடிவில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் (PIB Release ID: 2050561),"விசாரணையின் போது சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கத்தின் அடிப்படையில், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 336 மாணவர்களுக்கு பதிலாக 333 பேரின் பெயர்கள் மற்றும் தேர்வான விவரங்களை மட்டுமே சங்கர் ஐஏஎஸ் அகாடமியால் வழங்க முடிந்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 336 பேரிலும் 221 பேர் இலவசமாக வழங்கப்படும் நேர்முகத்தேர்வு வழிகாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்கள். 71 பேர் மெயின்ஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள். 35 பேர் பிரிலிம்ஸ் எனப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சித் தேர்வுகளுக்கு (Prelims Test Series ) மட்டுமே பணம் செலுத்தியவர்கள். 12 பேர் பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள். 4 பேர் பிரிலிம்ஸ் பயிற்சித் தேர்வு மற்றும் மெயின்ஸ்க்கான சில பாடங்களை மட்டும் தேர்வு செய்தவர்கள். இந்த அடிப்படைத் தகவல்களை விளம்பரத்தில் குறிப்பிடாமல் விட்டது நுகர்வோரான பணம் கட்டி சேரும் மாணவர்களை ஏமாற்றும் செயல் என நுகர்வோர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.