கொல்கத்தா:மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வந்த சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வராக செயல்பட்டு வந்த சந்தீப் கோஷ் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
குறிப்பாக பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது அதை தற்கொலை என பெற்றோர்களிடம் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே அவரசர அவசரமாக கட்டட புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்தது. இதற்கிடையே இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் சடலங்களைச் சட்டவிரோதமாக பயன்படுத்தியது, மருந்துவ உபகரணங்கள் விநியோகிக்கும் நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி இருந்தார். இதனை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், மாணவி கொலை வழக்குடன் நிதி முறைகேடு வழக்கையும் விசாரிக்க உத்தரவிட்டது.
14 இடங்களில் சோதனை:இதனையடுத்து சந்தீப் கோஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது வீடு உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்தநிலையில் 2 வார கால விசாரணைக்குப் பிறகு நிதி முறைகேடு விவகாரத்தில் சந்தீப் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சந்தீப் கோஷ் இந்திய மருத்துவ சங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தத்தளித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்.. விஜயவாடாவை புரட்டிப்போட்ட கனமழை.. பல்வேறு ரயில் சேவைகளும் ரத்து!