மீரட்:உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் சேர்ந்து புதிதாக பிறந்த நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி கொன்றுள்ளனர். விலங்கு நல ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மீரட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோபா மற்றும் ஆர்த்தி. இவர்கள் இருவருமே ராணுவ வீரர்களின் மனைவிகள் ஆவர். இவர்கள் வீட்டருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. பிறந்த அந்த குட்டிகளின் முணுமுணுப்பு சத்தத்தால் சோபாவும், ஆர்த்தியும் கடுப்பு ஆகியுள்ளனர்.
இதனால், கடந்த வியாழக்கிழமை அன்று காலை சோபாவும், ஆர்த்தியும் சேர்ந்து குட்டிகளை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, படுத்துறங்கிக்கொண்டிருந்த 5 நாய் குட்டிகளின் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றுள்ளனர். பின்னர் மறுநாள் இந்த விவகாரம் அருகிலிருந்த விலங்குகள் பராமரிப்பு சங்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து இரு பெண்களிடம் விசாரித்தனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு பயிற்சி: 12ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையில் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!
பின்னர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கர்கெடா காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நாய் குட்டிகளை இரக்கமின்றி கொன்ற சோபா மற்றும் ஆர்த்தி மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 325வது பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.