கேரளா:கேரளாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐயுடன் தொடர்புடைய 15 பேருக்கு மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்த வழக்கறிஞரான ரஞ்சித் சீனிவாசன் பாஜக ஒபிசி அணியின் தலைவராக இருந்தார். இவர் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் 19 ம் தேதி அவரது குடும்பத்தாரின் முன்னிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரும் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய சிறப்பு வக்கீல் பிரதாப் ஜி படிக்கல், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரில் 14 பேர் மட்டுமே இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இன்று ஆஜர்படுத்தப்படாத குற்றவாளிக்கும் இந்த தண்டனை பொருந்தும் என நீதிபதி வாய்மொழியாக தெரிவித்ததாக கூறுனார்.
உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீதமுள்ள ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதும், அவருக்கு எதிரான தண்டனை அறிவிக்கப்படும் என்றார். இதையடுத்து உயிரிழந்த பாஜக பிரமுகர் ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர், இந்த தீர்ப்பால் தாங்கள் திருப்தி அடைவதாக கூறியுள்ளனர்.