தெலங்கானா:தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாஸ்ய நந்திதா (37), சங்காரெட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்எல்ஏவான லாஸ்ய நந்திதா, இன்று (பிப்.23) காலை பதன்செரு வெளிவட்டச் சாலையில் (Patancheru Outer Ring Road) காரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
லாஸ்ய நந்திதா சென்ற கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவருடன் சென்ற அவரது உதவியாளர் ஆகாஷ் மற்றும் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு நல்கொண்டா பகுதியில் நடந்த பிஆர்எஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு லாஸ்ய நந்திதா வந்து கொண்டிருந்த கார் நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் ஆட்டோ ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
லாஸ்ய நந்திதாவின் தந்தை சயன்னா 5 முறை செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். அவரது தொகுதியிலேயே லாஸ்ய நந்திதா இம்முறை போட்டியிட்டு வென்றிருந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தான் சயன்னா உடல்நலக்குறைவால் உயிரிழந்திருந்தார். அதனையடுத்து அதே தொகுதியில் போட்டியிட்ட லாஸ்ய நந்திதா முதல்முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.