புதுடெல்லி:ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பல்வேறு பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கியமான தளமாக பிரிக்ஸ் மாநாடு உருவெடுத்துள்ளது,"என கூறியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இது தவிர கடந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்த எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளும் இப்போதைய உச்சி மாநாட்டில் பங்கேற்கின்றன.
இந்த உச்சிமாநாட்டில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.மேலும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ரஷ்யா அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருநாடுகளின் தலைவர்களுடன் இந்தியா உடனான உறவு குறித்து அவர் பேசுகிறார்.
இதனிடையே பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் முன்பு எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.