தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்களுக்கு மாதம் ரூ. 2100 நிதியுதவி: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக வாக்குறுதி - financial assistance to women - FINANCIAL ASSISTANCE TO WOMEN

ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் 7 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக பெண்களுக்கு மாதம் ரூ.2100 நிதியுதவி, அக்னி வீரர்களுக்கு அரசு வேலை உத்தரவாதம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியுள்ளது.

ஹரியாணாவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
ஹரியாணாவில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு (Photo Credit - BJP 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 3:55 PM IST

ரோத்தக்: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. காங்கிரஸ் நேற்று ஏழு வாக்குறுதிகள் அறிவித்த நிலையில் பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹரியாணாவின் ரோத்தக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, ஹரியாணா பாஜக தலைவர் மோகன் லால் படோலி மற்றும் அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

அக்னி வீரர்களுக்கு அரசு வேலை உத்தரவாதம்

'லடோ லக்ஷ்மி யோஜனா' திட்டத்தின் கீழ் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 நிதியுதவி.

மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஐஎம்டி கர்கோடாவை போன்று 10 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும். கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

சிராயு ஆயுஷ்மான்' திட்ட தொகை, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் என்பது ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

'அவல் பாலிகா யோஜனா' திட்டத்தின் கீழ் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்.

'ஹர் கர் கிரஹினி யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.500-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.

24 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்.

2 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

இதையும் படிங்க:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு.. ராஜஸ்தான் மீட்புக் குழுவினர் அசத்தல்!

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜே.பி.நட்டா பேசுகையில், "காங்கிரஸைப் பொறுத்தவரை, தேர்தல் அறிக்கை ஒரு சம்பிரதாயம் மட்டுமே. இது அவர்களுக்கு வெறும் சடங்காகவும், மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹரியாணா எப்படி இருந்தது? நில மோசடிகளுக்குப் பெயர் பெற்றதாகவும், ஊழல் மற்றும் ஆதாய அடிப்படையில் வேலைகள் வழங்கப்படுவதுமாக இருந்தது. எங்களுக்கு 'சங்கல்ப் பத்ரா' (தேர்தல் அறிக்கை) மிகவும் முக்கியமானது. நாங்கள் ஹரியாணாவுக்கு இடைவிடாமல் சேவை செய்து வருகிறோம்" என்றார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையாக 7 வாக்குறுதிகளை வெளியிட்டது. அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது, 2 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

90 இடங்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details