பீகார்: சில மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் களங்கள் தொடர்ச்சியாக பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியான தகவல் அரசியல் களங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் அரசியலில் நிலவிவரும் குழப்பம் என்ன?: பீகார் மாநில முதலமைச்சர் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையும், 2020ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் பாஜக-வின் கூட்டணியுடன் சந்தித்தார். இந்நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடியுடன் இணைந்து பீகாரில் ஆட்சி அமைத்தார்.
பின்னர் பாஜகவை வீழ்த்த இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளைத் திரட்டி கூட்டணி அமைக்க முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜகவுடன் நாளை (ஜன.28) காலை 10 மணியளவில் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் துணை முதலமைச்சர் பதவி வகித்து வரும் ஆர்.ஜே.டி கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
நிதிஷ் குமாரின் திடீர் விலகலுக்கான காரணம் என்ன?: முன்னதாக என் டிஏ கூட்டணியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு அதனை எதிர்த்து இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து INDI-ALLIANCE என்று ஒருமித்த கூட்டணியை அறிவித்தனர். ஆனால் தற்போது எதிர்பார்ப்பினைக் கடந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளுக்குள்ளே பல்வேறு பூகம்பங்கள் வெடித்துள்ளன. இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.
அதில், பிரதமர் வேட்பாளர் மற்றும் சீட் பகிர்வு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்பதுபற்றி விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி உருவாகுவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஜே.டி.யு. கட்சியின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்களால் வலியுறுத்தப்பட்ட நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா மற்றும் அரவிந்த கெஜிரிவாலின் வலியுறுத்தல் படி மல்லிகார்ஜூனா கார்கே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.