திருவனந்தபுரம்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.26) கேரளா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு இன்று (ஏப்.26) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த 18 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் அசிம் மூக்கின் மூலம் தனது முதல் வாக்கினை செலுத்தினார். 90 சதவீத மாற்றுத்திறனாளியான அசிமுக்கு இரண்டு கைகள் கிடையாது.
ஒரு காலில் குறைபாடு, தாடை பற்கள், வாய் மற்றும் செவிப்புலன் பிரச்சினைகளாலும் அசிம் அவதியுற்று வருகிறார். இருப்பினும், தனது முதல் வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றி தேசிய அளவில் அசிம் கவனம் ஈர்த்து உள்ளார். கேரள முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் கே.எம் ஆபிரகாமுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புரா பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு கே.எம்.ஆபிரகாம் வாக்களிக்க வந்தார். தேர்தல் அதிகாரிகளிடம் தனது வாக்காளர் அடையாள அட்டையை வழங்கிய நிலையில் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை சோதனையிட்டபோது, அதே எண்ணில் மற்றொரு பெண்ணின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது தெரியவந்தது.