கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது இந்த வழங்கி சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய், மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், சம்பவம் நடந்த இரவில் பணியில் இருந்த மருத்துவர்கள் நான்கு பேர் மற்றும் ஒரு தன்னார்வலர் என ஏழு பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று கொல்கத்தா காவல்துறை தரப்பில் பதிவான தகவல்களில் பல்வேறு முரண்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.
ஆனால், திடீர் திருப்பமாக காவல்துறை தரப்பில் மருத்துவமனையின் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை மருத்துவர் கொலை குறித்து போலீசுக்கு தகவல் கொடுப்பதற்கு முன்னர், மருத்துவமனை நிர்வாகம் பெண் மருத்துவரின் பெற்றோரை தொடர்புகொண்டு தவறான தகவல்களை அளித்துள்ளதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது, சம்பவத்தன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று மருத்துவமனை நிர்வாகம்தான் முதன்முதலில் அவரது பெற்றோருக்கு போன் செய்து தெரிவித்துள்ளது.