டெல்லி: மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில், இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, மார்ச் 21ஆம் தேதி முதல், கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். 7 நாள் அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில், மார்ச் 28ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியிருந்தது.
இதையடுத்து, 4 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க, ஏப்ரல் 1ஆம் தேதி வரை அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, தனது அடிப்படை உரிமைகள் அமலாக்கத்துறையால் மீறப்பட்டதாகக் கூறி, கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இன்றுடன் கெஜ்ரிவாலின் காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில், அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத்துறைக்கு ஒத்துழைக்க கெஜ்ரிவால் மறுப்பதாகவும், சரிவர பதில்கள் எதுவும் அழிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.