டெல்லி: 18வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கியது. அதில், தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது, ஏஐஎம்ஐம் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுத்தீன் ஓவைசி பதவியேற்கும் போது, அரபி வசனங்களை ஓதி உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். பின்னர், "ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் பாலஸ்தீன், தக்பீர் ஆல்லாஹு அக்பர்" என்று முழக்கமிட்டார்.
அசாதுத்தீன் ஓவைசி முழக்கமிட்ட வார்த்தைகள் மக்களவையில் உள்ள சில உறுப்பினர்கள் மத்தியில் கோபத்தை எழுப்பியது. இதனால் அவையில் சலசலப்பு நிலவியது. குறிப்பாக, அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியது தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி கூறியதாவது, "நாடாளுமன்றத்தில் அசாதுத்தீன் ஓவைசி ஜெய் பாலஸ்தீன் என முழக்கமிட்டது முற்றிலும் தவறு. அவையின் விதிமுறைகளுக்கு எதிரானது. இந்தியாவில் வாழும் அவர் ஏன் பாரத் மாத்தா கி ஜெய் என்று கூறவில்லை. இதன் மூலம் மக்கள் அவர் அரசியல் அமைப்பிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் வெளியே அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவரது முழக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் போது பல முழக்கங்களை விடுத்தனர். நான் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் பாலஸ்தீன் என்று கூறியதில் என்ன தவறு?
அது எப்படி அரசியல் அமைப்பிற்கு எதிரானதாக இருக்கும்? அது குறித்து அரசியலைப்புச் சட்டத்தில் இருக்கும் விதிகளை காட்டுங்கள். பாலஸ்தீன மக்கள் ஒடுக்கப்பட்டவர்கள். பாலஸ்தீன மக்கள் குறித்து மகாத்மா காந்தி கூறியதை நீங்கள் படிக்க வேண்டும்" என பதிலளித்தார்.
இதனிடையே, அசாதுத்தீன் ஓவைசி தான் மக்களவையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதை தனது 'X' சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "ஐந்தாவது முறையாக மக்களவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்றுள்ளேன். இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) நான் சிறுபான்மை மக்களுக்காக தொடர்ந்து எனது குரலை எழுப்புவேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்ட அசாதுத்தீன் ஓவைசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கொம்பெல்லா மாதவி லதாவை 3.38 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜெய் தமிழ்நாடு முதல் 'வாழ்க சின்னவர்' வரை.. பதவியேற்பின் போது தமிழக எம்பிக்கள் கூறியது என்ன?