டெல்லி : ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புது அறிவிப்பானையின் படி, ஜனவரி 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மத்திய அரசு பணியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஜனவரி 20ஆம் தேதியிடப்பட்ட அறிவிப்பானையை வெளியிட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படுவதைத் தடுக்கவும், நோயாளிகளின் பராமரிப்பை எளிதாக்கவும், புறநோயாளிகள் பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜனவரி 22ஆம் தேதி வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் அனைத்து அவசர சிகிச்சை சேவைகளும் வழக்கம் போல் இயங்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரி 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.