கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட எந்த விதமான அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று அதிகாலை பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், உடனடியாக மீட்புப் பணிகளைத் துவங்கினர். இதில் 13 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் மேலும், சிலர் சிக்கி இருக்கலாம் என அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசர சேவை அமைச்சர் சுஜித் போஸ் கூறுகையில், "இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1லட்சம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.