திரும்பிய பக்கமெல்லாம் மழைநீர்.. குடிநீரின்றி தத்தளிக்கும் பாக்கம் மக்கள்! - குடியாத்தம்
🎬 Watch Now: Feature Video
Published : Aug 27, 2023, 8:54 PM IST
வேலூர்: குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் அந்த பகுதியிலேயே தேங்கி நிற்கும் சூழல் உள்ளது. இதன் விளைவாகக் குடிநீருடன் மழைநீர் கலந்து வருவதாகவும் மற்றும் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் வயதான முதியவர்களும், குழந்தைகளும் அதிகம் வசித்துவருகின்றனர். ஆகவே, மழை நீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்றும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் வயதான முதியவர்கள் மழை தண்ணீரிலும் சேற்றிலும் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழை நீர் செல்ல வழி செய்து தரும்படி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே உடனடியாக மழை நீர் தேங்கி நிற்காமல் செல்வதற்கு வழி செய்து தரும்படி பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.