Vijayakumar IPS:விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்ல ஆயத்தம்! - கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்
🎬 Watch Now: Feature Video
கோவை: கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஜபிஎஸ், இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை 6.45 மணியளவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு பின்னர் அவரது முகாம் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தனது மெய் பாதுகாவலரிடம் துப்பாக்கியை பெற்றுக்கொண்டு அவரது அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், இச்சம்பவம் குறித்து முகாம் அலுவலகத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கிடங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வடக்கு ஆர்டிஓ கோவிந்தன் ஆகியோர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக் கிடங்கு பகுதியில் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அங்கு வருகை தந்த ஏடிஜிபி அருண், அவரது சடலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தபின், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், ''டிஐஜி விஜயகுமார் குடும்பப் பிரச்சனையும் இல்லை, பணிச் சுமை பிரச்னையும் இல்லை,ஓசிடி எனும் மன அழுத்தப் பிரச்னையில் இருந்துள்ளார். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது'' என்றார். இதைத்தொடர்ந்து, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமாரின் உடல் பிரேதப்பரிசோதனைக்குப் பின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.