VallaNadu - ஆட்டம் காணும் ஆரம்ப சுகாதார நிலைய அடித்தளம்! - the Govt PH Center walls collapsing
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் ஒரு கட்டடம் சேதமடைந்திருந்தது. அதை சீரமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து புதிதாக கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூபாய் 71.50 லட்சமும், பழைய கட்டடத்தை புதுப்பிக்க ரூபாய் 25 லட்சம் என மொத்தம் 96.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிஎஸ்ஆர் நிதி மூலம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டடம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக தற்போது அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், அடித்தளம் அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தற்போது அடித்தளம் முறையாக அமைக்கப்படாமல் அடித்தளத்தில் ஜல்லிக் கற்களை கையால் பெயர்த்தால் பெயர்ந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்டபோது, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுமட்டும் இன்றி, அடித்தளமே முறையாக அமைக்கப்படாமல், கட்டப்படும் கட்டடம் முறையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கட்டடம் கட்டப்பட்டு உடைந்துவிட்டால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு முறையாக இதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தரமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளனர்.