பயணிகளை மிரட்டுகிறார்களா திருநங்கைகள்? - கோவில்பட்டியில் நடந்தது என்ன? - Tuticorin News
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 7) மதுரைக்கு இயக்கவிருந்த அரசுப் பேருந்தில் சில திருநங்கைகள் ஏறி உள்ளனர். அவர்கள், பேருந்தில் இருந்த பயணிகளிடம் பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதனை அறிந்த ஓட்டுநர், திருநங்கைகளை கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள், பணியில் இருந்த அரசுப் பேருந்து நடத்துனர் சரவணசாமியை அவதூறாக திட்டியதாக தெரிகிறது. இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி, மற்றொரு பேருந்திற்குச் சென்றுள்ளனர். இதனால் மதுரைக்கு இயக்கவிருந்த பேருந்து பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக திருநங்கைகள் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதே மாதிரியான சம்பவங்கள் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நிகழ்ந்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் காவல் துறையினர் உடனடியாக தலையிட்டு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.