பாம்புகளை எப்படி கையாளுவது? முன் களப்பணியாளர்களுக்கு பயிற்சி!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, பொள்ளாச்சி, டாப்சிலிப் உலர்ந்தி மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் பணிபுரியும் முன் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து ஆனைமலை புலிகள் இயக்குநர் வழிகாட்டுதலின்படி, வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்தும் பாம்புகளை கையாளும் விதம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அட்டகட்டி வன உயிரினம் மேலாண்மை பயிற்சி மையத்தில் வன உதவி பாதுகாவலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கைதேர்ந்த பாம்பு பிடிக்கும் வல்லுநரால் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பாம்பை எவ்வாறு கண்டறிவது, எந்த வகை பாம்பு என எப்படி அறிந்து கொள்வது, விஷப்பாம்பை கையாளும் விதம், பாதுகாப்பாக பாம்புகளை வனப்பகுதியில் விடும் செயல்பாடு, பாம்புகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, வேட்டை தடுப்பு காவலர்கள் கூறுகையில், "பாம்புகள் குறித்து எங்களுக்கு பயிற்சி அளித்தது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது. வனப்பகுதிகளில் அதிக அளவில் பல்வேறு வகையான பாம்புகள் வசித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகள், தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவில் பாம்புகள் உள்ளது. தற்போது அளித்துள்ள பயிற்சியானது பொதுமக்களை பாதுகாக்கவும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது" என தெரிவித்தனர்.