சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை!
🎬 Watch Now: Feature Video
தேனி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் குளிக்க வனத் துறை தடை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளா ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி, மறு அறிவிப்பு வரும் வரை, அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பக்தர்கள் புனித நீராடவும் கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் தடை விதித்து உள்ளனர்.
மேலும், அருவியில் நீர்வரத்து குறைந்து சீரான பிறகு பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.