பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-இல் தண்ணீர் திறப்பு! - TN government has issued an ordinance
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட 15ஆம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம், தற்போது 83.47 அடியாக இருப்பதால், அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரட்டைப் படை மதகுகள் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நீர் திறப்பு முதற்கட்டமாக 500 கன அடியும், படிப்படியாக உயர்ந்து 2,300 கன அடி என அதிகரிக்கப்படும். ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை, அதாவது 120 நாட்களுக்கு மொத்தம் 23.84 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஈரோடு, கரூர் மற்றம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் வாய்க்கால் சுத்தம் செய்தல் மற்றும் கான்கிரீட் தளம் அமைத்தல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரிரு நாளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அணை நிலவரம்: தற்போது 105 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 83.47 அடியாகவும், நீர் இருப்பு 17.59 டிஎம்சியாகவும், நீர் வரத்து 834 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 805 கன அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 102 கன அடியாகும். நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.