மவுத்தார்கன் வாசித்து அசத்திய நெல்லையின் செல்லப்பிள்ளை காந்திமதி யானை! - Nellaiappar temple in thirunelveli
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று நெல்லையப்பர் கோயில். இக்கோயிலில் காந்திமதி என்ற பெண் யானை கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு வயது 53 என்றபோதிலும் யானை காந்திமதி நெல்லை மக்களின் செல்லப் பிள்ளையாகவே இருக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுக்கு 12 மாதமும் பெருந்திருவிழாக்கள் நடந்து வருகிறது.
அத்தனை திருவிழாவிலும் காந்திமதி யானைக்கு தனி இடமுண்டு. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யானையின் எடை 4 ஆயிரத்து 450 கிலோ இருந்தது. இந்த நிலையில் மருத்துவர்கள் காந்திமதி யானை எடை குறைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அப்போது தினமும் காந்திமதி மூன்று மணி நேர நடைப்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதன் உணவுப் பழக்க வழக்கத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
இதற்கெல்லாம் காந்திமதி அளித்த ஒத்துழைப்பு அபரிமிதமானது என்றே கூறலாம். குறிப்பாக ஒரே ஆண்டில் காந்திமதி 300 கிலோ எடை குறைந்தது. இது அதன் உடல் ஆரோக்கியத்துக்கு உதவியது. இருப்பினும் வயது முதிர்வு காரணமாக அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று அதற்கு உரிய சிகிச்சையும் கவனிப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. திருவிழா காலங்களில் தினமும் சுவாமி புறப்பாடு நிகழும். அப்போது யானையும் சுவாமிக்கு முன்பாக நகர்வலம் வரும்.
காந்திமதி கால் கொலுசுகள் அதிர நடந்துவரும் அழகைக் காணவே பெரும் கூட்டம் கூடும். நெல்லையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி வேலைகள் நடந்து வருகின்றன. எனவே சாலையில் சில இடங்களில் கல், மண் மற்றும் சில ஆணிகள் ஆங்காங்கே கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், சாலையில் நடந்து காந்திமதி யானையின் கால்களில் இவை ஏதும் தாக்கி விடக்கூடாதே என்று வருந்திய பக்தர்கள், அதற்கு செருப்பு தைத்துக் கொடுத்து வீட்டில் ஒரு குழந்தையாகவே பார்த்து வருகின்றனர்.
இத்தனை கவனிப்பிற்கு மத்தியில் இருக்கும் காந்திமதி தற்போது மவுத்தார்கன் (Mouth Organ) வாசித்து அனைவரையும் ஈர்த்து வருகிறது. யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு செல்லும் ஒவ்வொரு யானையும் தனது பல அபரிமிதமான திறமைகளை வெளிபடுத்தியது.
இந்த நிலையில் யானை காந்திமதி கோயிலில் காலை வழக்கமான நிகழ்வுகளை முடித்துவிட்டு கோயில் வசந்த மண்டபத்தில் ஓய்வெடுக்குக் நேரத்தில் மவுத்தார்கன் வாசிக்கும் பழக்கத்தையும் தொடர்ந்து வருகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.