ரூ.2000 செல்லாது எதிரொலி! திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பு! காணிக்கையாக ரூ.2 கோடி வசூல்! - அறநிலையத்துறை
🎬 Watch Now: Feature Video
Published : Sep 28, 2023, 10:14 AM IST
தூத்துக்குடி: மத்திய அரசு அறிவித்த 2000 ரூபாய் செல்லும் காலம் செப்.30 ஆம் தேதியுடன் நிறைவடைவதால் தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் நேற்று (செப். 27) எண்ணப்பட்டன. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
எண்ணப்பட்ட உண்டியலில் காணிக்கை பணமாக ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763 ரூபாயும், கோசாலை பராமரிப்பு உண்டியலில் 19 ஆயிரத்து 711 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 89 ரூபாயும் என மொத்தம் 2 கோடியே 78 லட்சத்து 21 ஆயிரத்து 563 ரூபாய் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும், தங்கம் 2 ஆயிரத்து 100 கிராமும், வெள்ளி 19 ஆயிரம் கிராமும், 424 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.