திருப்பத்தூருக்கு 3 கும்கி யானைகள் வருகை! - wilson kumki
🎬 Watch Now: Feature Video
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநில காட்டு எல்லைப் பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியேறி, தொடர்ந்து திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்தன. இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இதனையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா தலைமையில், வனத்துறை காவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து, தினந்தோறும் 2 காட்டு யானைகளையும் காட்டுப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி, மாலை நேரத்தில் காட்டுப் பகுதிக்குச் செல்லும் காட்டு யானைகள், மீண்டும் காலையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி அருகே இருக்கும் ஏரிகளில் குளித்து விட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தன.
அதிலும், நேற்று (மே 17) திருப்பத்தூர் அடுத்த அன்னாண்டிப்பட்டி ஏரியில் இருந்து மாலை விரட்டி அடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள், இன்று (மே 18) மீண்டும் திருப்பத்தூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏழருவி பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகின்றன.
இந்த நிலையில், ஆசிரியர் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி, முதுமலையில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என மொத்தம் 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை விரட்ட தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.