விஜயகாந்த் மறைவு: தென்காசி அருகே கண்ணீர் வடித்த கிராமமக்கள்..!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலமானார். இந்நிலையில், அவரது மறைவுக்கு தென்காசி மாவட்டம் புளியங்குடி, திருவேட்டநல்லூர் கிராம மக்கள் கண்ணீர் மல்க அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவருமான விஜயகாந்த் உடலநலக்குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்தின் உயிரிழந்த இந்த செய்தி வெளியானது முதல் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கடந்த 2015ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழக மக்களின் அன்பைப் பெற்று பிரபலமானவர். இதனைத்தொடர்ந்து, 2006 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பின்னர், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
கேப்டன் என்று அனைவராலும் போற்றப்படும் விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களிடையே பேரிழப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூர் கிராமத்தில் அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிராம மக்கள் ஒன்று திரண்டு, அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் இன்று (டிச.29) காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.