திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 5ஆம் நாள் தீபத் திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி! - thirukarthikai deepam 5th day festival
🎬 Watch Now: Feature Video
Published : Nov 22, 2023, 9:32 AM IST
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், வரும் 26ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 5ஆம் நாளான நேற்று (நவ.21) இரவு, தமிழகத்திலேயே மிக பழமை வாய்ந்த, சுமார் 32 அடி உயரமும், 107 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் பவனி வந்தார்.
விநாயகர், முருகர், பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அனைவரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தளுளினர். அங்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து, பஞ்ச மூர்த்திகள் அண்ணாமலையார் கோயிலின் முன்பாக 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்று, வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதியுலா நடைபெற்றது.