அண்ணாமலையார் கோயிலில் 8ஆம் நாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா; வெள்ளி வாகனத்தில் பிச்சாண்டவர் சாமி உலா! - Deepam Festival 2023
🎬 Watch Now: Feature Video
Published : Nov 25, 2023, 7:13 AM IST
திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் பஞ்ச மூர்த்திகள் பெரிய வெள்ளி ரிஷப வாகனம், காமதேனு கற்பக விருட்ச வாகனம், நாக வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.
தற்போது திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் பிச்சாண்டவர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் வாசலில் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து நான்கு மாட வீதியில் வலம் வந்த பிச்சாண்டவர் சாமி மண்டி தெரு, மணலூர்பேட்டை சாலை, அசலியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் உலா வந்து, பெரிய தெரு காந்தி சிலை அருகே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வில்வ இலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. மேலும், சுமார் அரை மணி நேரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, வண்ண வண்ண நிறங்களில் பக்தர்களுடன் சேர்ந்து பிச்சாண்டவர் சாமி வான வேடிக்கையை கண்டு ரசித்தார்.