நாமக்கல்லில் கோலாகலமாக நடந்த 'தேங்காய் சுடும்' பண்டிகை!.. பண்டிகையின் சிறப்பு என்ன?
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்: ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப் பட்டாலும், காவிரி நதிக்கறை பகுதிகளான ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஆடி மாதத்தின் பிறப்பை கொண்டாட தேங்காய் சுடும் பண்டிகையை பின்பற்றி வருகின்றனர்.
மகாபாரத காலத்தில், யுத்தமானது ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் தொடர்ந்து, ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது என்பது மக்களின் நம்பிக்கை. போர் தொடங்கும் நாளன்று அதாவது, ஆடி மாதம் முதல் நாளன்று பாண்டவர் படையைச் சேர்ந்த வீரர்கள், விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் பூஜைசெய்து தர்மம் வெற்றி பெற வேண்டும் என்று, கைக்கு கிடைத்த தேங்காய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய், உப்பு சேர்த்து நெருப்பில் சுட்டு, அதை இறைவனுக்கு சமர்ப்பித்து போருக்கு சென்றுள்ளனர். இதை நினைவுகூரும் விதத்தில், அன்றிலிருந்து இன்று வரை ஆடி மாதம் தோறும் தேங்காய் சுடும் பூஜை கொண்டாடப்படுகிறது.
அதன்படி நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு முன்பு தேங்காய் சுட்டு வழிபட்டனர். இதற்கு முன்னதாக வாதனம் மரத்தின் குச்சி அல்லது அழிஞ்சி மரத்தின் குச்சியின் தோல் சீவி மஞ்சள் தடவி வைத்து விட்டு. பின் பச்சரிசி, நாட்டு வெல்லம், வறுத்த எள், உடைத்த பச்சைப் பயிற் முக்கால் பங்கும், தேங்காயிலிருந்து எடுத்த நீர் கால்பங்கும் சேர்த்து, மஞ்சள் தடவிய குச்சியை மூலம் முற்றிய தேங்காய்க்குள் திணித்து, அதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நெருப்பினில் சுட்டு மகிழ்ந்தனர். சுட்ட தேங்காய்களை விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து, வழிபட்டனர்.