ரயில் நிற்பதற்குள் ஏறிய பயணி கீழே விழுந்த சிசிடிவி காட்சி..பதைபதைக்கும் வீடியோ! - Sudhir Kumar
🎬 Watch Now: Feature Video

மயிலாடுதுறை சந்திப்பு ரயில் நிலையம் முக்கிய வழித்தடமாக விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் விரைவு ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு 11.45 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் முதலாவது நடைமேடையில் சென்று கொண்டிருந்தபோது பயணி ஒருவர் எஸ் 5 பெட்டியில் ரயில் நிற்பதற்குள் ஏற முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பயணி படியில் ஏறும்போது தவறி கீழே விழுந்ததால் ஒரு கால் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடைவெளியில் சிக்கியது. இந்த சம்பவத்தைப் பார்த்த அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதிர்குமார் துரிதமாக செயல்பட்டு தவறி கீழே விழுந்த பயணி விபத்தில் சிக்குவதற்கு முன்பு காப்பாற்றினார்.
லேசான காயங்களுடன் உயிர் தப்பிய பயணி முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இடம் கிடைக்குமா என்பதற்காக எஸ் 5 பெட்டியில் நின்ற டிக்கெட் பரிசோதகரைப் பார்த்ததால் அவரிடம் கேட்பதற்காக ஓடிச்சென்று ஏறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரயிலில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அறிவுறுத்தி, அதே ரயிலில் அந்த பயணியை அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதிர்குமார் கூறுகையில், “ரயில் நிற்பதற்கு முன்பும், புறப்பட்டு செல்லும்போது ஓடிச்சென்று ரயிலில் ஏறினால் இது போன்ற விபத்துக்களைச் சந்திக்க நேரிடும்” என்றார்.
இதனிடையே, துரிதமாக செயல்பட்டு தடுமாறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுதீர் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.