தாலி கட்டிய கையோடு மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த புதுமாப்பிள்ளை! - இன்றையச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல், சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் உமா மகேஸ்வரி. இவர் கீழ ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சுந்தரவேல் ராமமூர்த்தி, உமா மகேஸ்வரி இருவரும் உறவினர்கள் மட்டுமின்றி சில ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவே, இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் உமா மகேஸ்வரிக்கு இறுதி ஆண்டுக்கான தேர்வு தொடங்கியுள்ளது.
இதனால் தேர்வு எழுத வேண்டும் என்று உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதற்கு சுந்தரவேல் ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் 7 - 9 மணிக்குள் முகூர்த்தத்தில் திருமணம் முடிந்து உள்ளது. அதனைத் தொடர்ந்து கையோடு சுந்தரவேல் ராமமூர்த்தி தனது மனைவியான உமா மகேஸ்வரியை தேர்வு எழுத கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்.
கல்லூரி நிர்வாகத்தினர் புதுமணத் தம்பதியை வாழ்த்தியது மட்டுமின்றி, உற்சாகமாக தேர்வு எழுதும் படி உமா மகேஷ்வரியிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து உமா மகேஸ்வரியும் மகிழ்ச்சியோடு தேர்வு அறைக்குச் சென்று தேர்வு எழுதினார். தனது காதல் மனைவி தேர்வு எழுதி முடிக்கும் வரை சுந்தரவேல் ராமமூர்த்தி தேர்வு மையத்துக்கு வெளியே காத்திருந்து, தேர்வு முடிந்தவுடன் மகிழ்வோடு மனைவி அழைத்துச் சென்றார்.
கல்வி தான் நமக்கு முக்கியம் என்று தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற தேர்வு முடியும் வரை காத்திருந்த புது மாப்பிள்ளையின் செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள்... விமானக் கட்டணம் உயர்வு... சென்னை - தூத்துக்குடி டிக்கெட் இவ்வளவா!