ரேஷன், ஆதார் உள்ளிட்ட அனைத்து அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்த ஜவ்வாது மலைக் கிராம மக்கள் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் கானமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட எலந்தம்பட்டு கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எலந்தம்பட்டு கிராம மக்கள் விவசாயப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்து பொருட்களும் வாங்க சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, படவேடு பகுதியில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால், எலந்தம்பட்டு கிராமத்தில் இருந்து படவேடு கிராமத்திற்குச் செல்ல முறையான பேருந்து வசதியோ, சாலை வசதியோ இல்லாததால் மலைவாழ் மக்கள் அனுதினமும் நடந்தே சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
ஆகவே, படவேடு அருகே உள்ள கோட்டமலை அடிவாரத்தில் இருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை உள்ள 8 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டுமென கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக கடந்த 15ம் தேதி சாந்தி என்ற பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விரைவாக அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல முடியாத காரணத்தினால் அவர் இறந்தார் என்றும், இது போன்று பிரசவ நேரங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறப்பதும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
உடனடியாக எலந்தம்பட்டு கிராமத்தில் இருந்து கோட்டமலை அடிவாரம் வரை உள்ள 8 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைத்துத் தர வேண்டும் எனவும், சாலை அமைத்துத் தராவிட்டால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் அரசிடம் திருப்பி ஒப்படைப்போம் என மலைவாழ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.